நடிகர் விவேக் மரணத்திற்கு உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக சிந்தனையாளர் என பல பாதைகளிலும் சிறப்பாக பயணித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை மீளா முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 



தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விவேக் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சோசியல் மீடியா மூலமாகவும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி'படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

Scroll to load tweet…

அடுத்ததாக உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு” என விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.