கன்னடம் தமிழ் மொழியில் இருந்து உருவானது என்கிற கமல்ஹாசனின் பேச்சுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Kamal Haasan Faces backlash in karnataka : கன்னடம் தமிழில் இருந்து தோன்றியது என கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே 24ந் தேதி நடைபெற்றது. இதில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கமலின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

இந்த விழாவில் சிவராஜ்குமார் தான் கமல்மீது வைத்திருக்கும் அன்பை மேடையில் பேசும்போது வெளிப்படுத்தினார். அதேபோல் கமலுக்காக பாட்டு ஒன்றையும் பாடி அசத்தினார். இதையடுத்து பேச வந்த கமல்ஹாசன், 'உயிரே உறவே தமிழே' என்று கூறி தன்னுடைய உரையை தொடங்கினார். அப்போது, கன்னட நடிகர் சிவராஜ்குமாரை சுட்டிக்காட்டி பேசிய கமல், அவர் வேறு மாநிலத்தில் வசிக்கும் தனது குடும்பம் என்று குறிப்பிட்டது மட்டுமின்றி, கன்னடம் தமிழில் இருந்து உருவானது தான் என்றும் கூறினார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

கன்னடம் தமிழ் மொழியில் இருந்து உருவானது என்கிற கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் கன்னடத்தை அவமதிக்கும் விதமாக பேசிய கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

தக் லைஃப் கர்நாடகாவில் வெளியாகுமா?

இந்நிலையில், தக் லைஃப் படத்தின் புரமோஷனுக்காக பெங்களூருவுக்கு வந்த நடிகர் கமல்ஹாசனை முற்றுகையிட கன்னட அமைப்பினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கமல்ஹாசனின் தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்து கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் தடை செய்ய நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதனால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்பது கேள்விக் குறி ஆகி உள்ளது.