நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், தனக்கு தடைவிதித்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறி உள்ளார்.

Kamal Haasan refuses apology : நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, ‘தமிழில் இருந்து கன்னடம் உருவானது’ என பேசி இருந்தார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கமல் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தைப் புறக்கணிப்போம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், இந்தியா ஒரு "ஜனநாயக" நாடு என்பதால் "சட்டம்" மற்றும் "நீதி"யில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார்.

கமல் மன்னிப்பு கேட்க மறுப்பு

சென்னையில் உள்ள திமுக கட்சி தலைமையகத்திற்கு வந்த கமல்ஹாசன் அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது எம்பி ஆக தேர்வாகி உள்ள கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டத்திலும் நீதியிலும் நம்பிக்கை கொண்டவன். கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அதை சந்தேகிக்க மாட்டார்கள். எனக்கு முன்பும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் கேட்க மாட்டேன்" என திட்டவட்டமாக கூறிவிட்டார் கமல்.

தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை

இதற்கிடையில், கன்னட மொழி குறித்த கமலின் கருத்துக்கள் காரணமாக 'தக் லைஃப்' படத்தின் வெளியீட்டை கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) தடை செய்துள்ளது. இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய KFCC பிரதிநிதி சா ரா கோவிந்து, நடிகர் பொது மன்னிப்பு கேட்கும் வரை படத்தின் வெளியீட்டை நிறுத்துமாறு கோரிய கர்நாடக ரக்ஷண வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளுடன் உறுதியாக நிற்கிறோம் என்பதால் கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' படத்தின் வெளியீட்டை கர்நாடகாவில் தடை செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

சென்னையில் நடந்த விளம்பர நிகழ்வின் போது கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்று KFCC பிரதிநிதி கூறினார். அவர் கூறுகையில், "அழுத்தம் இருக்கும்போது, நான் செய்ய வேண்டும். கர்நாடக ரக்ஷண வேதிகே கூட இருந்தனர்; அவர்கள் என்ன சொன்னாலும், நாம் அதைச் செய்ய வேண்டும். அவர்களும் கூட இதைப் பற்றிப் பேசுவார்கள். நிச்சயமாக, கமல் ஹாசனால் எங்கும் 'மன்னிக்கவும்' என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. நாங்கள் நிச்சயமாக படத்தை வெளியிட மாட்டோம். நாங்கள் (KFCC) ரக்ஷிணா வேதிகே மற்றும் பிற கன்னட அமைப்புகளுடன் நிற்போம்."

புதன்கிழமை, கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கூறப்படும் கருத்துக்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா அவரை விமர்சித்தார், மேலும் அவர் மொழியின் "நீண்டகால" வரலாற்றை அறியவில்லை என்று கூறினார். "கன்னடத்திற்கு நீண்டகால வரலாறு உண்டு. கமல்ஹாசனுக்கு அது தெரியாது," என்று கர்நாடக முதல்வர் கூறினார். மணிரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' படத்தில் திரிஷா கிருஷ்ணன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5ந் தேதி திரைக்கு வருகிறது.