ரோபோ சங்கர் உடலுக்கு நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கூலிங் கிளாஸ் அணிந்து அஞ்சலி செலுத்தியதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரோபோ சங்கர் கமலின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். செப்டம்பர் 16ம் தேதி சென்னையில் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றபோது ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரோபோ சங்கர் மரணம்

வெறும் 46 வயதில் அவர் உயிரிழந்துள்ளது திரைத்துறை மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ சங்கர் மறைவால் அவர் குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

கூலிங் கிளாஸ் அணிந்து கமல்ஹாசன் அஞ்சலி

இதேபோல் நடிகரும், எம்.பி.யும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். கமல்ஹாசன் கூலிங் கிளாஸ் அணிந்தபடி ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கமல் எப்போதும் கண்ணாடி அணிபவர் அல்ல; அப்படி இருக்கும்போது தன் மீது உயிரையே வைத்திருந்த ஒருவருக்கு கமல் கூலிங் கிளாஸ் அணிந்து அஞ்சலி செலுத்தலாமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் சூட்டிய கமல்

ரோபோ சங்கரை பொறுத்தவரை கமல்ஹாசனின் ரசிகர் என்பதை விட வெறியர் என்றே சொல்லலாம். கமலின் உடல் மொழியையும், அவரின் குரலையும் மிமிக்ரி செய்து டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும், பட விழாக்களின் மேடைகளிலும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நடிகர் கமல்ஹாசன் தான் 'நட்சத்திரன்' என்று பெயர் சூட்டியுள்ளார்.

கமல் செயலுக்கு சப்போர்ட்

இப்படியாக ரோபோ சங்கருக்கும், கமல்ஹாசனுக்கும் நெருக்கம் அதிகமாக இருக்க, அவர் கூலிங் கிளாஸ் அணிந்து அஞ்சலி செலுத்தியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதே வேளையில் கமல்ஹாசன் தனது அழுகையை மறைக்கவே கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் கூலிங் கிளாஸ் போடுவது இயல்புதான். இதையெல்லாம் பெரிசாக பேச வேண்டுமா? என அவர்கள் தெரிவித்துள்ளனர்.