தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் ஜாக்கிசான் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Simbu Team Up With JackieChan : தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் சிம்பு. அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுக்கு மகனாக நடித்துள்ளார் சிம்பு. இப்படம் வருகிற ஜூன் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் இருவரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் இணைந்து பணியாற்றினர்.
சிம்பு கைவசம் உள்ள படங்கள்
நடிகர் சிம்பு கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அதில் ஒன்று எஸ்.டி.ஆர் 49. இப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். மேலும் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இதுதவிர சிம்புவின் 50வது படமான எஸ்.டி.ஆர் 50 திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை சிம்புவின் ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

மேலும் சிம்பு கைவசம் உள்ள மற்றொரு திரைப்படம் எஸ்.டி.ஆர்.51. இப்படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு - ஜாக்கிசான் கூட்டணி
இந்நிலையில், சிம்புவுடன் ஜாக்கிசான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அவர்கள் இணையும் படத்தை ஜூட் அந்தனி ஜோசப் இயக்க உள்ளாராம். இவர் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 2018 திரைப்படத்தை இயக்கியவர். இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி மட்டும் உறுதியானால் சிம்புவின் கெரியரில் மிகப்பெரிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
