மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கிடையே லண்டனில் தன் முதல் சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றினார்.
Ilaiyaraaja valiant Symphony : உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து லண்டன் அப்பல்லோ அரங்கில் இளையராஜா சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த சிம்பொனி தொடங்கியது. வேலியண்ட் என பெயரிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இளையராஜாவின் இசைக் குறிப்புக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இளையராஜாவுக்கு குவிந்த வாழ்த்து
இதன்மூலம் ஏற்கனவே சிம்பொனி அமைத்த இசை மேதைகளான, மொசார்ட், பீத்தோவன் சாய் கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜா இணைந்திருக்கிறார். முன்னதாக லண்டன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இளையராஜா கடந்த மார்ச் 6ந் தேதி சென்னையில் இருந்து லண்டன் சென்றார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்... சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை -சிம்பொனி படைக்கும் இளையராஜாவிற்கு ரஜினி வாழ்த்து!
இளையராஜா சிம்பொனியால் அதிர்ந்த லண்டன் அரங்கம்
லண்டனில் இளையராஜா சிம்பொனியை அரங்கேற்றியபோது அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்திருந்து தங்கள் தந்தையின் வியத்தகு சாதனையை கொண்டாடினர். அதேபோல் பாலிவுட் இயக்குனர் பால்கியும் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்க லண்டன் சென்றிருந்தார். இளையராஜா தன்னுடைய சிம்பொனி இசையை அரங்கேற்றியதும் கைதட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.
35 நாட்களில் உருவாக்கப்பட்ட சிம்பொனி
சிம்பொனி என்றால் பல வருடக் கணக்கில் உருவாக்குவார்கள் என சொல்லப்படும், ஆனால் இளையராஜா வெறும் 35 நாட்களில் இந்த சிம்பொனிக்கான இசைக்குறிப்பை தன் கையால் எழுதி முடித்திருக்கிறார். இந்த சிம்பொனியை அரங்கேற்றியதன் மூலம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியபோது எடுத்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
இதையும் படியுங்கள்... Incredible India போன்று நான் Incredible இளையராஜா!சிம்பொனி இசை நிகழ்வுக்கு புறப்பட்ட இளையராஜா பேட்டி!
