தமிழ் சினிமாவுக்கு நாளை துவங்கவிருக்கும் அக்டோபர் மாதம் மிகவும் சோதனையான ஒரு மாதமாக அமையவுள்ளது. வரும் 27ம் தேதி தீபாவளிப் பண்டிகை வர உள்ள நிலையில் இம்மாதத்தில் மட்டும் சுமார் 25 படங்கள் வரை ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இன்னொரு கொடுமையாக யோகிபாபு நடித்த 4 படங்கள் ரிலீஸாகின்றன.

சென்சார் முடிந்து ரிலீஸாகாத பல படங்கள் எப்போதும் பெண்டிங்கில் இருந்துகொண்டே இருக்கும் நிலையில் இந்த அக்டோபரில் இதுவரை மிக அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கும் படங்கள் மட்டுமே ஒரு டஜனைத் தாண்டுகின்றன. இந்த வரிசையில் சிரஞ்சீவியின் ‘ஷைரா நரசிம்மா ரெட்டி’2ம் தேதி ரிலீஸாக அடுத்த இரண்டு நாட்களில் வெற்றிமாறனின் ‘அசுரன்’,ஜீ.வி.பிரகாஷின் ‘100% காதல்’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. அடுத்த 11ம் தேதி யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள ‘பப்பி’,’பட்லர் பாபு’ஆகிய படங்களும் காமெடி வேடத்தில் நடித்துள்ள சுந்தர்.சி.யின் ‘இருட்டு’ தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதே தேதியில் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள ‘மிக மிக அவசரம்’படமும் திரைக்கு வருகிறது.

இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’,த்ரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’,’அருவம்’, சமுத்திரக் கனியின் ‘அடுத்த சாட்டை’ ஆகிய படங்கள் தங்கள் அக்டோபர் வருகையை உறுதி செய்திருக்கின்றன. தீபாவளிக்கு இப்போதைக்கு விஜய்யின் பிகிலும் கார்த்தியின் கைதியும் ரிலீஸை உறுதி செய்துள்ள நிலையில் இன்னும் சிலர் கடைசி நேரத்தில் கடை விரிக்கக்கூடும் என்பதால் இந்த அக்டோபர் போட்டி கொஞ்சம் ஓவர்தான்.