1994-ம் ஆண்டு வெளியான வீரா படத்துக்கு பின் ரஜினியும் (rajinikanth), இளையராஜாவும் (ilayaraaja) இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் ரஜினி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன. அண்மையில் இந்த லிஸ்டில் புது வரவாக பாலிவுட் இயக்குனர் பால்கியும் இணைந்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இவர், பாலிவுட்டில் பா, ஷமிதாப், கி கா, பேடுமேன் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் அண்மையில் ரஜினியை சந்தித்து கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரஜினி - பால்கி கூட்டணி இணைந்தால், அந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1994-ம் ஆண்டு வெளியான வீரா படத்துக்கு பின் ரஜினியும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றவில்லை. தற்போது பால்கி இயக்கும் படம் மூலம் ரஜினி - இளையராஜா கூட்டணி 27 ஆண்டுகளுக்கு பின் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.