இசைஞானி இளையராஜாவின் பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Ilaiyaraaja Copyright Case against Good Bad Ugly Movie : அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. பாடல்களை படத்தில் பயன்படுத்த தடை விதித்துள்ளது நீதிமன்றம். பதிப்புரிமை மீறல் புகாரின் அடிப்படையில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் தொடர்பாக இளையராஜா புகார் அளித்திருந்தார். இரண்டு வாரங்களுக்குள் படத்தயாரிப்பாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
தனது பாடல்கள் அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது பதிப்புரிமைச் சட்டத்தை மீறுவதாகவும் இளையராஜா தனது மனுவில் தெரிவித்திருந்தார். 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். பாடல்களுக்கு உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக படத்தயாரிப்பாளர்கள் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். படத்தில் அனுமதியின்றி தனது 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்காவிட்டால் ஏழு நாட்களுக்குள் பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இளையராஜா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு முன்னரும் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆதித் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.243 கோடி வசூலித்திருந்தது. நடிகர் அஜித்தின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் இதுதான். அதிரடி ஆக்ஷன் படமாக உருவான இதில் சுனில், ஷைன் டாம் சாக்கோ, பிரசன்னா, ஜாக்கி ஷெராஃப், பிரபு, யோகி பாபு, த்ரிஷா, பிரியா வாரியர், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
