பாகுபலி-1, பாகுபலி-2 திரைப்படத்தில் பல்லால தேவன் பயன்படுத்தும் “குதிரை பிளேடு ரதம்” “காட்டு எருமை பிளேடு ரதம்” எப்படி தயாரானது குறித்து படத்தின் கலை இயக்குநர் சாபு சிரில் மனம் திறந்துள்ளார்.

கடந்த வாரம் ரீலாஸ் ஆன பாகுபலி-2 திரைப்படம் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் அதில் உள்ள செட்கள், அரண்மனைகள், பிரமாண்டமான சிலைகள், கற்சிற்பங்கள் என தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு பாராட்டதவர்களே இருக்க முடியாது.

நடிகர் ரஜினிகாந்த் முதல் அனைத்து நடிகர், நடிகைகளும் பாகுபலி படத்தை பார்த்த்து பிரமித்து வருகிறார்கள். திரைப்படத்துறையில் மிகப்பெரிய மைல்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் பாராட்டுக்கு இயக்குநர் ராஜமவுலியோடு சேர்த்து, செட்களை அமைத்து, மகிழ்மதி, குந்தலதேசத்தை கண்முன் காட்டியை கலை இயக்குநர் சாபு சிரிலையும் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட வாள், கேடயம், பழங்கால பொருட்கள் என ஒரு ராஜ்ஜியத்தை பார்ப்பவர்கள் கண்முன் சாபு சிரில் கொண்டு வந்துள்ளார். அந்த அளவுக்கு தனது செட்களை அமைத்து தனது கலைத்திறமையின் மூலம் தத்ரூபத்தையும், உயிரையும் உண்டாக்கியுள்ளார் சிரில் என்றால் மிகையாகாது.

பாகுபலி, பாகுபலி 2 இரு திரைப்படத்திலும் நாம் மிரமிக்கும் விஷயங்களில் முக்கியமானது பல்லால தேவன் பயன்படுத்தும் “மிக்சி பிளேடுகள்” போன்று உருவாக்கப்பட்ட பிரமாண்ட “பிளேடு ரதம்”. முதல்பகுதியில் குதிரை பூட்டப்பட்ட வாகனத்தில் இந்த பிளேடு ரதம் இருக்கும், 2-ம் பகுதியில் காட்டு எருமை பூட்டப்பட்டு பிளேடு தரம் இருக்கும்.

மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்ட அந்த பிளேடு ரதம் எப்படி அமைக்கப்பட்டது குறித்து கலை இயக்குநர் சாபு சிரிலிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,  “ பாகுபலி, பாகுபலி-2 திரைப்படத்தில் பல்லால தேவன் பயன்படுத்திய “பிளேடு ரதம்” முற்றிலும் உண்மையானது தான். அதில் கிராபிக்ஸ் ஏதும் செய்யவில்லை.

“ராயல் என்பீல்ட் எஞ்சினால்” அந்த பிளேடு ரதம் உருவாக்கப்பட்டது. அந்த தேருக்கும் பிளேடுக்கும் சம்பந்தம் இல்லை. அந்த பிளேடின் கீழ் வலிமையான ராயல் என்பீல்ட் எஞ்சின் பொருத்தப்பட்டு அதை இயக்கினோம். ராயல் என்பீல்டு எஞ்சின் பயன்படுத்தியதால் தான், ரதம் ஓடும் போது பிளேடு வேகமாகவும், வலிமையாகவும் சுத்த முடிந்தது. மேலும், சாரட்டுக்கும் கூட முறைப்படி ஓட்டத்தெரிந்தவர்களையும் பயன்படுத்தினோம். மிகவும் சிரமப்பட்டு இந்த ரதத்தை உருவாக்கினோம்.

அதுமட்டுமல்லாமல், தேவசேனாவின் அரண்மனைக்கான அரங்குகள் ஐதராபாத்தில் உள்ள ஒரு அலுமினிய தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. வெள்ளை பளிங்கு கல் தேவை என்பதால், அங்கு அதை படமாக்கினோம். ஐதராபாத்தில் அந்த அலுமினிய தொழிற்சாலை ஏறக்குறைய 4 ஏக்கரில் இருந்தது.

திரைப்படத்தில் வீரர்கள், பிரபாஸ், ராணா, சத்தியராஜ் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய வாள்கள் அனைத்தும் உண்மையானதுதான். மிகவும் எடை குறைவான ஸ்டீல் மூலம் அவை தயாரிக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.