போராட்ட களத்தில் கைலியுடன் ரத்த சொட்ட சொட்ட நிற்கும் ஜீ.வி-யின் 'ரெபல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில், ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ரெபல்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்.'' என்றார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஜீ.வி.பிரகாஷ் முகத்தில் ரத்தத்தோடு, போராட்ட காலத்தில் கைலியுடன் நிற்பதை பார்க்க முடிகிறது. பெட்ரோல் பாட்டில்கள் ஒரு புறம் சும்மா பறக்குது பாஸ்!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D