இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகளின் கொண்டாட்டம் தொடங்கட்டும்! ஆரம்பமானது KH234 படத்தின் படப்பிடிப்பு!
மணிரத்னம் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள, KH234 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான தகவல் அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். கல்கியின் வரலாற்று புனைவு நூலான 'பொன்னியின் செல்வன்' கதையை அதே பெயரில், இரண்டு பாகங்களாக இயக்கிய இவர் தன்னுடைய அடுத்த படத்தை, உலக நாயகனும், மாமனாருமான கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து எடுப்பதை உறுதி செய்தார். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆனபிறகும் இதுவரை படப்பிடிப்பு குறித்து என ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இப்படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டது. ஏற்கனவே மணிரத்னம், மற்றும் கமல்ஹாசனும் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து, மீண்டும் இதே கூட்டணி சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
இந்த படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. தற்போது பல மாதங்கள் கழிந்து இந்த இரு சக்திகளும் ஒன்றினையும் படம் குறித்த தகவலை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் அதிகார பூர்வமாக தங்களின் எக்ஸ் பக்கத்தில் கமல் - மணிரத்னத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் இப்படத்தின் ப்ரோமோ ஒன்று கமலை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 7-ஆம் தேதி அந்த புரோமோ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தபடத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. KH234 படம் குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் "இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகளின் கொண்டாட்டம் தொடங்கட்டும்" என்கிற கேப்ஷனுடன் இருவரும் எதிரெதிரே நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.