ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் அஜித் கஜா புயல் நிவாரணத்திற்கு வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

கஜா புயல் கரையை கடந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரமான தென்னை, முந்திரி, நெல்,கரும்பு போன்றவற்றை இழந்துவிட்டதால் அடுத்த வேளைக்கு சோறு கூட இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் தன்னார்வலர்கள் அனுப்பி வரும் நிவாரணப் பொருட்களை நம்பியே பெரும்பாலான கிராம மக்கள் தற்போது பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசும் நிதி வழங்குவதை தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பொதுமக்கள் புயல் நிவாரணத்திற்கு தாரளமான நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து தொழில் அதிபர்கள், திரையுலகினர், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த உதவியை தமிழக அரசுக்கு செய்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகர் அஜித் தனது பங்களிப்பாக 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அஜித் தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு நடிகர். ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் வெறும் 15 லட்சம் கொடுத்துள்ளது பலராலும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. அண்மையில் திரையுலகில் வந்து வெற்றிக் கொடி நாட்டிய சிவகார்த்திகேயன் கூட 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதியோ தனது பங்கிற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். திரையுலகில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய் கூட தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக செலவழிக்க தனது சொந்தப்பணம் கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அஜித் வெறும் 15 லட்சம் கொடுத்துவிட்டு ஒதுங்கியது எப்படி சரியாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. 

அஜித் வெறும் 15 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது அவரது தீவிர ரசிகர்களை கூட கவலை அடைய வைத்துள்ளது. படம் வெளியான ஒரே நாளில் தமிழக மக்கள் அஜித்திற்கு 15 கோடி ரூபாய் வரை வசூல் கொடுக்கின்றனர். ஆனால் அஜித் 15 லட்சம் நிவாரணம் வழங்கியிருப்பது அள்ளிக் கொடுக்கும் தமிழர்களுக்கு கிள்ளிக் கொடுத்தது போல் தான் என்று கூறி வருகின்றனர்.