'பிகில்' படத்தின் ரிலீசுக்கு, இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தற்போது புதிய பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது. விஜய் படங்கள் என்றாலே கண்டிப்பாக சர்ச்சையில் சிக்காமல் ரிலீஸ் ஆகாது என்பது விதிக்கப்படாத விதியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட, விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், தெறி, சர்க்கார், என அனைத்து படங்களும் ஏதேனும் ஒரு பிரச்சனையை கடந்துதான் வெளியாகியது.  அந்த வகையில் தீபாவளிக்கு ரிலீசாக தயாராக இருக்கும், 'பிகில்' படத்திற்கும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்து செல்கிறது.

ஏற்கனவே 'பிகில்' படத்தின் கதை தன்னுடையது என துணை இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்து அதிரவைத்தார்.  மேலும் இசை வெளியீட்டு விழாவில், அரசியல் தலைவர்களை அவமதிப்பது போல் விஜய் பேசியதாக ஒரு சர்ச்சை கிளம்பி, அந்த பிரச்சனைகள் முடியவே பல வாரங்கள் ஆனது.

இந்நிலையில்,  'பிகில்' இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் கூறிய குட்டி கதையில், பூ தொழிலாளர்களை அவமதிக்கும் விதத்தில் இருந்தது என கூறி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இதனால் விஜய் தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் பூ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

விஜய் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளதாக கூறியுள்ளார், தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ். எனினும் 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், திடீரென இப்படி ஒரு புதிய பிரச்சினையை இவர்கள் கொண்டு வருவது ஏற்கக் கூடியதாக இல்லை என விஜய் ரசிகர்களும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.