ஆள விடுங்கடா சாமி... ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு வந்து தலைதெறிக்க ஓடிய ரசிகர்கள் - காசெல்லாம் வேஸ்ட் என குமுறல்
சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியில் ஏற்பாடுகள் சரியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரியும் நடத்தி வந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் சென்னையில் இசைக்கச்சேரி நடத்துமாறு ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை வைத்தனர். சென்னையில் அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என ஏ.ஆர்.ரகுமான் கூறி இருந்தார். இருப்பினும் ரசிகர்கள் மிகவும் ஆசைப்பட்டதால், அரசிடம் அனுமதி வாங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ந் தேதி இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டு இருந்தார் ஏ.ஆர்.ரகுமான்.
ஆனால் அன்றைய தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியதால் இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது. இதையடுத்து மறக்குமா நெஞ்சம் என பெயரிடப்பட்ட அந்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த முறை மழை வந்தாலும் இசை நிகழ்ச்சியை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறி இருந்த ரகுமான், நேற்று திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
இதையும் படியுங்கள்... இன்ஸ்டாவில் சிக்கிய லவ் பேர்ட்ஸ்..! ஒரே வீட்டில் ராஷ்மிக்கா மற்றும் விஜய் தேவரகொண்டா? சமந்தா ரசிகர்கள் நிம்மதி
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் தான் இந்த பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலோடு படையெடுத்து வந்தனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து போனது. அத்தனை டிராபிக்கையும் கடந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு போன ரசிகர்கள், உயிர்பயத்தால் பாதியிலேயே திரும்பிச் சென்றுள்ளனர்.
அங்கு நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருந்ததால், அந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயக்கமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி குழந்தைகளும் தொலைந்து போய் உள்ளனர். 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு கூட உட்கார இடம் கிடைக்கவில்லையாம். இதனால் ஆதங்கத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்ற அவர்கள் ஏ.ஆர்.ரகுமானை திட்டித்தீர்த்தனர்.
இதுவரை இப்படி ஒரு மோசமான இசை நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியமே இந்த குளறுபடிக்கு காரணம் என ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல் டிக்கெட் விற்பனையிலும் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய ரசிகர்கள், 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இடத்தில் 50 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாகவும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் என்ன ரியாக்ட் செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டாருடன் பிரச்சனையாம்? தலைவர் 171.. கைவிடுகிறாரா லோகேஷ் கனகராஜ்? கொளுத்திப்போடும் நெட்டிசன்கள்!