புகழ்பெற்ற நாடக நடிகரும், இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன் காலமானார்
பிரம்மாண்ட மேடை நாடகங்களை இயக்கி நடித்து அதற்கு உயிர்கொடுத்து வந்த நடிகரும், இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன் காலமானார். அவருக்கு வயது 66.
புகழ்பெற்ற நாடக நடிகரும், இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66. தற்போதுள்ள மாடர்ன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படங்களை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த முடிகிறது. ஆனால் அந்த பிரம்மாண்டங்களையெல்லாம் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பே மேடை நாடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் தான் அமீர் ராசா ஹுசைன்.
தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து பிரபாஸ் நடிப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் படத்தை எடுத்துள்ளனர். இந்த பிரம்மாண்ட காவியத்தை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னரே மேடை நாடகத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் அமீர் ராசா ஹுசைன். அவர் கடந்த 1994-ம் ஆண்டு முதன்முதலில் லெஜண்ட் ஆஃப் ராம் என்கிற பெயரில் ராமாயணத்தை நாடகமாக அரங்கேற்றினார்.
இதையும் படியுங்கள்.... டிரக் மீது மோதி அப்பளம் போல் நொருங்கிய கார்... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த நாடகத்தின் கடைசி நிகழ்ச்சி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் நடத்தப்பட்டது. சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 19 செட்டுகள் அமைக்கப்பட்டு, 35 கதாபாத்திரங்கள் மற்றும் 100 பேர் கொண்ட குழுவினரின் உதவியோடு இந்த பிரம்மாண்ட நாடகத்தை நடத்தி அசத்தி இருந்தார். அமீர் ராசா ஹுசைன். அதேபோல் கார்கில் போரை மையமாக வைத்து தி பிஃப்டி டே வார் என்கிற நாடகத்தை நடத்தி உள்ளார்.
அமீர் ராசா ஹுசைன் அரசியலிலும் சில காலம் பணியாற்றினார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு வரை டெல்லி பாஜக துணைத் தலைவராக இருந்தார். இதையடுத்து மோடியை விமர்சித்துவிட்டு அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அமீர் ராசா ஹுசைன் கடந்த ஜூன் 3-ந் தேதி காலமானார். அவரின் மறைவு நாடகத்துறைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. மறைந்த அமீர் ராசா ஹுசைனுக்கு விராத் தல்வார் என்கிற மனைவியும், சுனிஸ் சுகைனா மற்றும் குலாம் அலி என இரு பிள்ளைகளும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்.... மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக நடித்த நடிகர் குஃபி பெயின்டல் காலமானார்