டிரக் மீது மோதி அப்பளம் போல் நொருங்கிய கார்... விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சூர் கைப்பமங்கலத்தில் நடந்த சாலை விபத்தில் நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி உயிரிழந்தார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4:30 மணியளவில் கைப்பமங்கலம் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோருடன் வடகரையில் இருந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் கொல்லம் சுதி. அப்போது கார், எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயம் அடைந்த கொல்லம் சுதியை மீட்டு கொடுங்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கைப்பமங்கலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் உறவு... கேக்கும்போதே கூசுது - சம்யுக்தாவை சரமாரியாக சாடிய விஷ்ணுகாந்த்
கொல்லம் சுதி, 2015ம் ஆண்டு வெளியான கந்தாரி படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தார் . கட்டப்பனாவில் ஹிரித்திக் ரோஷன், குட்டநாடனில் மார்பப்பா, கேசு ஈ வீடிண்டே நாதன், எஸ்கேப் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் குடும்ப பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவர் நடிகர் கொல்லம் சுதி.
நடிகர் கொல்லம் சுதியில் இந்த திடீர் மரணம் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் நடிகர் கொல்லம் சுதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கொல்லம் சுதிக்கு வயது 39.
இதையும் படியுங்கள்... யாஷிகா உடன் லாங் டிரைவ் சென்ற போட்டோவை பதிவிட்ட அஜித் மச்சினன்... மாமாகுட்டி என கலாய்க்கும் நெட்டிசன்கள்