கொரோனா லாக்டவுனால் திரையுலகம் பல்வேறு பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது. மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பிற்கான தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுக்காததால், கிடப்பில் போடப்பட்டுள்ள படங்கள் ஏராளம். இந்த முடக்கத்தால் திரைத்துறை 2 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில், தியேட்டர்களை திறக்கவும் அனுமதி கொடுத்தால் மட்டுமே திரையுலகம் பிழைக்க முடியும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் உலகத்தை வாட்டி வதைக்கும் கொரோனா தொற்று திரைத்துறையினரையும் புரட்டியெடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் பாதிக்கப்படுவதும், அதனால் பலர் இறந்தே போவதும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஏராளமான பிரபலங்கள் வயது மூப்பு, உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் அடுத்தடுத்து மரணமடைவதால், 2020ம் ஆண்டு மீதே ஒருவித வெறுப்பை உருவாக்கி வருகிறது. 

 

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் மரணமடைந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கே.ஆர்.கே.மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான் கே.ஆர்.கண்ணன் மாரடைப்பால் நேற்று மாலை 5.30 மணிக்கு காலமானார். அவரது தயாரிப்பில் 'மௌன யுத்தம்', 'கல்யாண காலம்', 'அவன்', 'நாணயம் இல்லாத நாணயம்', 'கலர் கனவுகள்', 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' போன்ற படங்கள் முக்கியமானவை. அவரது இறுதி சடங்கு இன்று  மாலை முகலிவாக்கம் அருகே உள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.