'மாமன்னன்' படத்தை தொடர்ந்து வடிவேலுவுடன் மீண்டும் கை கோர்க்கும் ஃபகத் பாசில்! வெளியான அறிவிப்பு!
மாமன்னன் படத்தை தொடர்ந்து, வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகும் படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ், பிரபல நடிகரும், எம்.பி-யுமான உதயநிதியை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் 'மாமன்னன்'. உதயநிதியின் கடைசி படமாக உருவான இந்த படத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், ஆழமான அரசியலும் பேசப்பட்டிருந்தது. இந்த படத்தில், மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்த நிலையில், ஃபகத் பாசில் ரத்னவேலு என்கிற அரசியல் தலைவராக நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக 35 கோடிக்கு எடுக்கப்பட்டு, சுமார் 55 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தை தொடர்ந்து, வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ள தகவலை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ்.
இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் புரொடக்ஷன் பேனரில் 98-ஆவது படமாக தயாரிக்க உள்ளார். வி கிருஷ்ண மூர்த்தி கதை எழுத, இயக்குனர் சுதீஷ் ஷங்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஆறுமணமே' என்கிற படத்தை இயக்கியவர். மேலும் அமலயாளத்தில் சில படங்கள் மற்றும் சீரியல்களை இயக்கி உள்ளார்.
வடிவேலு - ஃபகத் பாசில் நடிக்கும் படம் தார் சாலையை அடிப்படையாக வைத்தோ... சாலை மார்கத்தை அடிப்படையாக வைத்தோ உருவாகலாம் என்பதை தெரிவிக்கும் விதத்தில் இப்படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். கதைக்களம் மற்றும் மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.