கடந்த ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது. 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியின் போது ராமர், சீதை ஆகியோரின் உடையில்லா சிலை எடுத்துச்செல்லப்பட்டதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும் பேசியிருந்தார். 

இதையடுத்து பெரியார் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாகவும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 18ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை உமாபதி தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினர். 

மேலும் மத உணர்வை தூண்டி பெரியார் பெயருக்கு களங்கம் விளைத்து வன்முறையை தூண்ட முயண்ற ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக ஒத்திவைத்திருந்தது. 

இதனிடையே ரஜினிக்கு ஆதரவாக ஆறுமுகம் என்பவர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ரஜினிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய  வேண்டுமென்றும், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.  

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று வழங்க வேண்டி தீர்ப்பு இன்று வழக்கப்பட்டது. அதன்படி திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார். தனிநபர் வழக்கு தொடர்ந்தால் அதை பற்றி பின்னர் விசாரிக்கலாம் என்றும், ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை திரும்ப பெற அறிவுறுத்தியும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.