இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஈஸ்வரன்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இந்தியா முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும் இந்த திரைப்படம், மற்ற வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இதற்கு எதிராக ஆடியோ ஒன்றை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஒரே நாளில் ஓடிடி, தியேட்டர் ரிலீசை அனுமதித்தால் பிற படங்களும் அதேபோல் வெளியாக வாய்ப்புள்ளது. எனவே ஈஸ்வரன் படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாது என தெரிவித்திருந்தார். 

இதனிடையே சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கண் கலங்கிய நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நான் பெத்த பிள்ளை படம் வெளியே வந்தாகனும் என்பதால் தான் நான் உங்களை எல்லாம் சந்திக்க வந்துள்ளேன் எனக்கூறினார். ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் கழுத்தறுப்பு வேலைகள் நடந்து வருகிறது. படத்திற்கு தடை விதிக்க நினைக்கிறார்கள். அதற்கு காரணம் நான் தயாரிப்பாளர்கள் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டேன் என்பதற்காக பழிவாங்க நினைக்கிறார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டினார். 

 

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் சீரியலுக்கு திடீர் தடை போட்ட சன் டி.வி... சைடு கேப்பில் தட்டித்தூக்கிய முன்னணி சேனல்!

மேலும் க்யூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈஸ்வரன் பட வேலைகளை செய்யக்கூடாது என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் 10 நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியிட யோசித்து வருகிறோம் என சொன்னதற்காகவே பிரச்சனை செய்கிறார்கள். வேற ஒரு பெரிய படம் வருது... அவங்களுக்கு நிறைய தியேட்டர்கள் கொடுங்க... ஆனால் வேற எந்த படமும் ரிலீஸ் ஆக கூடாதா? என மாஸ்டர் திரைப்படத்திற்காக ஈஸ்வரன் ரிலீசை நிறுத்த பார்ப்பதாகவும் மறைமுகமாக குற்றச்சாட்டியுள்ளார்.