மலரில் எப்படி ஒளி இருக்கும்? பாடல் வரிகளை மாற்ற சொன்ன நடிகர்.. கவிஞர் வாலி சொன்ன தரமான பதில்..!
பி. மாதவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி, நம்பியார் போன்ற பலர் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியர்களில் கவிஞர் வாலியும் ஒருவர்.. நடிகர், கதையாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட வாலி 15,000 பாடல்களுக்கும் மேல் எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 60 மற்றும் 70களில் உச்சத்தில் இருந்த கவிஞர் வாலி, நடிகர் சிவாஜி கணேசனுக்காக 70 படங்களிலும், எம்.ஜி.ஆருக்காக 63 படங்களிலும் பாடல் எழுதி உள்ளார். காலத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்து கொள்ளும் வாலி வாலிப கவிஞர் என்றும் அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், அதர்வா என பல தலைமுறை நடிகர்களும் அவர் பாடல்களை எழுதி உள்ளார்.
அந்த வகையில் 1964-ம் ஆண்டு வெளியான தெய்வத்தாய் படத்திற்கும் வாலி தான் பாடல்களை எழுதினார். பி. மாதவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி, நம்பியார் போன்ற பலர் நடித்திருந்தனர். வீரப்பன் இடப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதில் எம்.ஜி.ஆர் தனது காதலியான சரோஜா தேவியை நினைத்து பாடும் பாடல் தான் ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன், நிலவின் குளிர் இல்லை” என்ற பாடல். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஆனால் வாலி இந்த பாடலை எழுதும் போது ஒரு ருசிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
அதாவது, இந்த பாடலில் ஒரு பெண்ணை பார்த்து மலரை பார்த்தேன், மலரில் ஒளி இல்லை என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இந்த வரிகளில் பிழை இருப்பதாக அப்படத்தில் நடித்திருந்த சீதாராமன் என்ற நடிகர் தயாரிப்பாளர் வீரப்பனிடம் கூறியுள்ளார். எந்த ஒரு மலரிலும் ஒளி இருக்காது, ஆனால் கவிஞரோ மலரில் ஒளி இல்லை என்று எழுதியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
'உலகம் சுற்றும் வாலிபன்' ஜெயலலிதா நடிக்க வேண்டிய படம்.. எம்.ஜி.ஆர் முடிவை மாற்றியது ஏன் தெரியுமா?
இதனை தயாரிப்பாளர் வாலியிடம் கூற, தான் எழுதியதில் தவறில்லை என்று கூறி வரிகளை மாற்ற மறுத்துவிட்டார். அதாவது, பாரதியார் தனது கவிதையில் “ சோலை மலரொளியோ உந்தன் சுந்தர புன்னகையோ” என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மலரில் ஒளி என்று கூறுவது வெளிச்சத்தை அல்ல, அதன் அழகை தான்.” என்று கவிஞர் வீரப்பனுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
நான் எழுதியது தவறு என்றால், பாரதியாரின் வரிகளும் தவறு தான் என்று கூறிய வாலி, பாடல் வரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டாராம். எனவே அந்த பாடலும், “ ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்.. நிலவில் குளிரில்லை.. அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளியில்லை” என்ற வரிகளுடனே உருவாக்கப்பட்டது.