ஜவான் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த அட்லி, தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அட்லி மாறினார். மோஸ்ட் வாண்டட் டைரக்டராக மாறிய அட்லீ நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் மாறி உள்ளார்.

அதன்படி பிகில் படத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை தொடர்ந்து பாலிவுட் சூப்பார்ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த நிலையில் ஜவான் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் படத்திற்காக அட்லிக்கு ரூ.32 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 42 கோடி) என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் பணக்கார இயக்குனர்களில் ஒருவராக அட்லி உருவாகி உள்ளார்.

ஜவான் படத்தை எப்படியாவது ஓட வச்சிரு ஆண்டவா.. ஷாருக்கான், நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..

ஜவான் படத்தின் மூலம் அட்லீ குமார் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை உறுதி செய்ய தயாராகி வரும் நிலையில், இப்படம் ரூ.1000 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு ரூ.52 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். தயாரிப்பு நிறுவனம் அதற்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக அட்லி மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013ல், ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது திரை பயணத்தைத் தொடங்கினார் அட்லி. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நாஜிம், சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ராஜா ராணி தென்னிந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் பவசூல் சாதனை படைத்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விஜய் விருது என்ற சிறப்பு விருதை அட்லி பெற்றார்.

ராஜா ராணி படத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யை வைத்து 2016ல் தெறி என்ற திரைப்படத்தை அட்லி இயக்கினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக அமைந்தது. 2017 இல் மெர்சல் மற்றும் 2019 இல் பிகில் போன்ற திரைப்படங்களின் மூலம் அட்லீ தனது வெற்றியைத் தொடர்ந்தார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி, ஹிந்தியிலும் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.