ஏப்ரல் 9ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான ஒரு குட்டி ஸ்டோரி பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டானது. இதனால் படத்தின் ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்து ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்திருந்தனர். அப்போ தானே விஜய் குட்டி கதை சொல்வார். அதில் ஐ.டி. ரெய்டு முதல் அரசியல் வருகை வரை ஏதாவது சூடான தகவல் கிடைக்கும் என  காத்துகிடந்தனர். 

இதற்கு முன்னதாக பிகில் படத்திற்கு அதிக சம்பளம் வாங்கிய விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை, அங்கேயே சென்று ஐ.டி. அதிகாரிகள் தூக்கி வந்தது எல்லாம் தனிக்கதை. அன்று முதலே கொதிநிலையில் இருக்கும் விஜய் ரசிகர்களை நேற்று வெளியான ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிப்பு கூல் செய்யும் என்று பார்த்தால், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதை போல் ஆகிவிட்டது. 

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் மார்ச் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. அன்று மாலை 6.30 மணி முதல் நிகழ்ச்சியை லைவாக சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பெரிய கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனால் தங்களது பொறுப்பை உணர்ந்த மாஸ்டர் படக்குழு, இசை வெளியீட்டு விழாவில் அதிக ரசிகர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவோ இந்த ஐடியாவை போட்டுள்ளனராம். மாஸ்டர் ஆடியோ லாஞ்சை நேரில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என விஜய் ரசிகர்கள் கதறினாலும், தற்போதைய நிலையை உணர்ந்து படக்குழு எடுத்த சரியான முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.