நடிகர் அஜீத்தின் மேற்பார்வையில் இயங்குவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்று இயங்கிவரும் தக்‌ஷா குழுவினர் வரும் தீபாவளிக்கு போலீஸார் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த யோசனையையும் சாட்சாத் அஜீத்தே தனது குழுவினருக்கு வழங்கியதாக தெரிகிறது. நடிப்பு பாதி, கார்,பைக் ரேஸ் மீதி என்று காலம் தள்ளிவரும் அஜீத் சமீபகாலமாக சமூக செயல்பாடுகள் சிலவற்றிலும்  அக்கறை காட்டிவருகிறார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகத்தில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா எனும் குழுவை உருவாக்கினர். இந்த குழுவின் ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ரிமோட் மூலம் வாகனங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான அஜித்திடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதால் தக்‌ஷா குழு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பல்கலைக்கழக அளவிலான ஏரோ டிசைன் போட்டியில் தக்‌ஷா குழு தங்களது திறனை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்டில் நடந்த யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்ச் போட்டியில் தக்‌ஷா குழு பங்கேற்றது. அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திய தக்‌ஷா அணிக்கு அந்த சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது. 

அந்த உற்சாக வெற்றியின் தொடர்ச்சியாக,  தக்‌ஷா அணியினர் வரும் தீபாவளியன்று  காவல் துறையுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னை தி.நகரை கண்காணிக்க உள்ளனர். அப்போது மாணவர்களுடன் அஜீத்தும் இணைந்து செயல்படுவார் என்று தெரிகிறது.