'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது இல்லை என்பது ஆச்சர்யம்? இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட வீடியோ!
2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 'ஜெய்பீம்' படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதது ஆச்சரியப்படுத்தி உள்ளது என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தில் மட்டும், இந்திய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும், அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே மொழிகள் கடந்து ரசிகர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி மொழிகள் கடந்து பல ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு, பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் 'ஜெய்பீம்'. இந்தப் படத்திற்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது, தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களை மட்டுமின்றி, தெலுங்கு திரை உலகை சேர்ந்த பிரபலங்களையும் வருத்தம் அடையச் செய்துள்ளது.
தேசிய விருது ஊக்கம் கொடுத்துள்ளது..! கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சி..!
குறிப்பாக நடிகர் நானி ஜெய்பீம் படத்திற்கு, ஒரு விருது கூட கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் போட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவில், ஜெய்பீம் என ஹேஷ் டாக் போட்டு மனம் உடைந்தது போன்ற இமேஜை பதிவிட்டு தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தொடர்ந்து பலர் 'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் சுசீந்திரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தேசிய விருது வென்ற படங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு, 'ஜெய்பீம்' படத்திற்கு விருது கிடைக்காதது குறித்தும் பேசி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "அனைவருக்கும் வணக்கம், கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான திரைப்படம். இதற்காக இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் நீண்ட கால கடின உழைப்பாளியாக இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு 'கருவறை' குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்துள்ளது. அவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த வரிசையில் 'ஜெய்பீம்' திரைப்படம் மிகவும் முக்கியமான திரைப்படம். இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் கிடைக்கவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. எனினும் ஐந்து தேசிய விருதுகள் தமிழ் திரை உலகிற்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என கூறியுள்ளார்.