டேக் ஓகேபா.. மகளின் லால் சலாம்.. டப்பிங் பணிகளை முடித்த ஸ்டைல் சாம்ராட் ரஜினிகாந்த் - வெளியான வீடியோ!
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பல உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கவுரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், தற்போது இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் என்று கூறியுள்ளது.
"மதத்தையும், நம்பிக்கையையும் மனதில் வை, மனித நேயத்தை அதற்கு மேல் வை, அது தான் நம் நாட்டின் அடையாளம்" என்று ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவர் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாட்ஷா படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் லால் சலாம் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் முதலில் மும்பையில் படமாக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த படக்குழு, அங்குள்ள மில் ஒன்றில் சில நாட்கள் ரஜினி நடிக்கும் காட்சிகளை படமாக்கியது. இதையடுத்து இறுதியாக திருவண்ணாமலையில் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.