Kalki 2 Movie Update : பிரபாஸ் - நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் "கல்கி பார்ட் 2" படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Deepika Padukone Kalki 2 exit : கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்று 'கல்கி 2898 ஏடி'. நாக் அஸ்வின் எழுதி இயக்கிய இந்தப் படம், ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் வகையைச் சேர்ந்தது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடி ரூபாய் வசூலித்தது. பிரபாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், ராஜேந்திர பிரசாத், சோபனா, பசுபதி, அன்னா பென் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
கல்கி 2 படத்தில் இருந்து விலகிய தீபிகா
இந்நிலையில், இப்படம் குறித்த மிக முக்கியமான ஒரு அப்டேட்டை தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் வெளியிட்டுள்ளது. கல்கியின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்கமாட்டார் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

கல்கி போன்ற ஒரு படத்திற்கு பெரிய அர்ப்பணிப்பு தேவைப்படுவதாகவும், இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்வதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சுமதி என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் தீபிகா நடித்திருந்தார். எனவே, தீபிகாவுக்கு பதிலாக அடுத்து யார் நடிக்கப் போகிறார் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.
வைஜெயந்தி மூவிஸ் பேனரில் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இரண்டாம் பாகம் 2027-ல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
குருக்ஷேத்திரப் போருக்குப் பிந்தைய ஒரு போஸ்ட்-அபோகாலிப்டிக் உலகத்தை கல்கி கதைக்களமாகக் கொண்டிருந்தது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கல்கி 2-வின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபிகா விலகியதால், அவருக்குப் பதிலாக யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
