பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் ரஜினியின் ‘தர்பார்’பட வியாபாரத்தை அதன் தயாரிப்பு நிறுவனமான லைகா தொடங்கியுள்ள நிலையில், அப்படத்துக்கு சொல்லப்படும் விலையால் விநியோகஸ்தர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனராம். இச்செய்தியால் ரஜினியும் அப்செட் ஆகியுள்ளதாகத் தகவல்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா,யோகிபாபு,இந்தி நடிகர் சுனில் ஷெட்டி  உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுக்கிறார்களாம்.

அதில் தயாரிப்பாளர் எஸ்.தாணு,  சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின் மைத்துனர் பாலாஜியும் இப்படத்தை வாங்கி வெளியிட முயல்கிறாராம். இப்படிப் பெரிய இடங்களைச் சேர்ந்த பலர் போட்டியிடுவதால், தர்பார் படத்தின் தமிழக உரிமைக்கான தொகையை உயர்த்திவிட்டதாம் லைகா நிறுவனம்.

விநியோகஸ்தர்கள் இப்படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை 50 முதல் 55 கோடிக்குள் முடித்துவிட நினைக்க தயாரிப்பாளர் தரப்போ 75 கோடி எதிர்பார்ப்பதாகச் சொல்கிறதாம்.சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த  ரஜினியின் ’பேட்ட’ படத்தின் தமிழக வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் 52 கோடிதான்  என்று சொல்லப்படுகிறது.அப்படி இருக்கும் நிலையில் இந்தப்படத்துக்கு எழுபது எண்பது என்று விலை சொல்வது பேராசை. ஏற்கனவே 2.0’ படத்துக்கும் இதேபோல் போட்டியிருந்ததென பெரும் விலை சொன்னது லைகா. அப்படத்தை வாங்கிய அத்தனை விநியோகஸ்தர்களும் நஷ்டத்தையே சம்பாதித்தனர். அப்படி இருக்க மீண்டும் ஒரு பெரிய விலையை லைகா சொல்வதால் ரஜினிக்கு தகவல் சொல்லப்பட அவர் லைகா நிறுவனத்தின் மீது சற்று வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.