சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உட்பட, பிரபலங்கள் பலரும் எதிர்பார்த்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்தது போலவே அரசியலைப் பற்றி பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இயக்குனர் பாலச்சந்தர் தான் தனக்கு ரஜினிகாந்த் என பெயர் வைத்தார். ஒரு நல்ல நடிகனாக நான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவருடைய ஆசை மற்றும் அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். அதேபோல் மக்களும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை எப்போதும் வீண் போகாது.

ஒரு வெற்றி கிடைக்க வேண்டுமென்றால், அதற்கான நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலை அமைய வேண்டும். அதே போல் அந்த நேரத்தில் இருக்கும் மனிதர்கள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் அது வரை காத்திருக்க வேண்டும்.  

ஆனால் இதனை பலர் எதிர்மறையாக பேசி வருகிறார்கள். நாம் அவர்களிடம் அன்பாக இருப்போம். என சூசகமாக அரசியலுக்கான நேரம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பற்றி பேசிய சூப்பர் ஸ்டார்,  ரமணா திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று. 'கஜினி' படம் பார்த்தபோது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசை தனக்கு தோன்றியது. ஆனால் அப்போது அந்த காலம் அமையவில்லை.  இப்போது 'தர்பார்' படத்தின் மூலம் அந்த காலம் கனிந்துள்ளதாக தெரிவித்தார்.