உலகையே உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் திரைத்துறையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 19ம் தேதி முதலே அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகிற்கு மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 


சினிமாவிற்கு தான் இப்படிப்பட்ட நிலை, வீட்டில் அடைந்து கிடக்கும் போது டி.வி.யி சீரியலையாவது பார்க்கலாம் என்றால் அதுக்கும் பிரச்சனை உண்டாகிவிட்டது. சீரியலில் சினிமாவை போல் இந்த வாரம் இல்லை என்றால், அடுத்த வாரம் ரிலீஸ் என்று அறிவிக்கும் வாய்ப்பே இல்லை. எப்போதும் குறிப்பிட்ட நாட்களுக்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஷூட் செய்து வைத்திருப்பார்கள். அதை வைத்து ஒரு 2 வாரத்திற்கு ஓட்ட முடியும்.  அதுக்கு மேல் போனால் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. 

மார்ச் 19ம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து என்ற அறிவிப்பு முன்னதாகவே கிடைத்ததால் பல சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சியைச் சேர்ந்த சீரியல் இயக்குநர்கள் ஒன்றுக்கு 3 இடங்களில் மாற்றி, மாற்றி ஒரே நேரத்தில் சீரியல் ஷூட்டிங்குகளை வைத்து முன்கூட்டியே எடுத்துவைத்துள்ளனர். 

இதனால் வரும் 30ம் தேதி வரை மட்டுமே பிரச்சனை இல்லை. அதன் பின்னர் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒருவேலை அப்போதும் கொரோனாவின் தீவிரம் குறையாமல் இருந்து, அந்த அமைப்பு படப்பிடிப்பை மேலும் சில நாட்களுக்கு ரத்து செய்ய அறிவுறுத்தினால், சீரியல்களின் நிலைமை மேலும் மோசமாகி விடும். 

அப்படி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த எபிசோட்டை திரும்ப ஒளிபரப்புவது, பழைய ரியாலிட்டி ஷோக்களை தூசி தட்டி போடுவது என்று மேலும் ஒன்றிரண்டு வாரங்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டியிருக்கும்.