ஆஸ்கர் விருது வென்ற ஊட்டிப் பெண் கார்த்திகி பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் அடங்கிய எக்ஸ்குளூசிவ் பேட்டி
ஆஸ்கர் விருது வென்று அசத்திய கார்த்திகி கோன்சால்வஸ் பற்றி கோவை ஜி.ஆர்.டி கல்லூரியின் துணை முதல்வர் கே.கே.ராமச்சந்திரன் நமது ஏசியாநெட் தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றுள்ள இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை கோவையில் உள்ள ஜி.ஆர்.டி என்கிற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தான் முடித்தார். இங்கு அவர் B.sc விஸ்காம் படித்து இருந்தார். கோவையில் படித்த மாணவி தற்போது ஆஸ்கர் விருது வென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார்.
இந்தநிலையில், கோவை டாக்டர் ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரியின் இயக்குநரும், துணை முதல்வருமான கே.கே.ராமச்சந்திரன் நமது ஏசியாநெட்நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கார்த்திகி கோன்சால்வ்ஸ் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது : “கார்த்திகி புகைப்படக் கலைஞராக சிறந்து விளங்கியவர். அதுமட்டுமின்றி கார்த்திகி சிறந்த இறகுப்பந்து வீராங்கனையும் கூட. அவர் கோவையில் விஸ்காம் முடித்துவிட்டு, ஊட்டியில் லைட் அண்ட் சவுண்ட் என்கிற இன்ஸ்டிடியூட்டிலும் பயின்றார்.
ஊட்டியில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் கார்த்திகி தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படத்தை எடுத்திருந்ததாக கூறிய ராமச்சந்திரன், இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போது இது தனக்கு இரண்டு விதத்தில் சந்தோஷமாக இருந்ததாக கூறினார். முதலில் இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வந்துள்ளது என கேள்விட்டதும் சந்தோஷப்பட்டேன். அடுத்து இது ஆஸ்கருக்கு நாமினேட் ஆகி இருக்கிறது என்பது மற்றுமொரு சந்தோஷம். ஆனால் தற்போது ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது என்பது நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.
இதையும் படியுங்கள்... விஸ்காம் படிச்சு என்ன சாதிச்சிடுவனு கேட்பவர்களுக்கு இதுஒரு பதில்! oscar நாயகி கார்த்திகியின் பேராசிரியை பேட்டி
இந்த ஆவணப்படத்தை மிகவும் பாசிடிவ் ஆக எடுத்திருப்பார் கார்த்திகி. ரொம்ப அழகாகவும், எமோஷனலாகவும் இருந்தது. பொதுவாக நாம் செல்லப்பிராணிகளை பார்த்திருப்போம். ஆனால் இதில் யானையின் குணாதிசியத்தை அழகாக வெளிக்கொண்டு வந்து வேறலெவலில் எடுத்திருந்தார் என ஆச்சர்யம் ததும்ப பேசி இருந்தார் ராமச்சந்திரன்.
அதேபோல் கார்த்திகி, தன்னிடம் அவரது படைப்புகள் பற்றி பகிர்ந்து கொள்வார் என கூறிய ராமச்சந்திரன், ஆஸ்கர் போவதற்கு முன்பு கூட கார்த்திகி தன்னிடம் பேசியதாக தெரிவித்தார். இந்த வெற்றியில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று நான் சொல்லமாட்டேன். இது முழுக்க முழுக்க அவரது உழைப்புக்கும், அவரது திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம். ஊட்டி போன்ற சிறிய நகரத்தில் இருந்து சென்று இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்தி இருக்கிறார். அவரது வாழ்க்கை பயணத்தில் நாங்களும் ஒரு சிறிய பங்காற்றி இருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வதாக நெகிழ்ச்சி உடன் தெரிவித்தார் ராமச்சந்திரன்.
இப்படத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியது தெரிந்த உடனே கார்த்திகியை கல்லூரிக்கு அழைத்து விழா ஒன்றை நடத்த ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் அதனை மேலும் சிறப்பாக கொண்டாடுவோம், அதில் நிச்சயம் கார்த்திகியும் கலந்து கொள்வார் எனவும் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஊட்டிப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?