ஊட்டிப் பெண் இயக்கத்தில்... தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது - யார் இந்த கார்த்திகி?
முதுமலையில் படமாக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில், அதை இயக்கிய கார்த்திகி கோன்சால்வஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உதகையில் பிறந்து வளர்ந்த பெண்ணான கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பரெர்ஸ் என்கிற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய குறும்படம் என்கிற சாதனையையும் இந்த குறும்படம் படைத்துள்ளது. இந்த குறும்படம் தமிழகத்தில் உள்ள முதுமலையில் தான் படமாக்கப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் உள்ள உணர்வுப்பூர்வமான கதையைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிப்பாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பொம்மன் பெள்ளி தம்பதியினர். 2017-ம் ஆண்டு தேன்கணிக்கோட்டை பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த ஆண் குட்டி யானையும், 2018-ம் ஆண்டு தாயைப்பிரிந்து சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த மற்றொரு யானையும், முதுமலையில் உள்ள முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ரகு, அம்மு என பெயரிடப்பட்ட இந்த யானைகளை வளர்க்கும் பொறுப்பு பொம்மன் பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளைப் போலவே இந்த யானைகளை வளர்த்து வந்துள்ளனர். ஒரு நாள் பொம்மன், ரகு என்கிற யானையுடன் ரோட்டோரம் நடந்து சென்றபோது தான் முதன்முதலில் கார்த்திகி கோன்சால்வஸ் என்கிற உதகையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் பார்த்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அகதிகள் முகாம் டூ ஆஸ்கர்... ‘அம்மா நான் ஆஸ்கர் ஜெயிச்சிட்டேன்’னு சொல்லி அரங்கை அதிரவைத்த கே ஹூய் குவான்
அந்த யானையை பார்த்த உடனே கார்த்திகிக்கு பிடித்துப் போக, அதனை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். அப்போது பொம்மன் உடன் ரகு தண்ணீரில் விளையாடியதை பார்த்த கார்த்திகிக்கு அவர்கள் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து குறும்படம் இயக்க வேண்டும் என ஐடியா வந்துள்ளது. இதையடுத்து தான் கடந்த 2017-ம் ஆண்டு தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படத்தை இயக்க தொடங்கி இருக்கிறார் கார்த்திகி.
இந்த குறும்படத்தை எடுத்து முடிக்க அவருக்கு 5 ஆண்டுகள் ஆனதாம். மொத்தம் 450 மணிநேரம் இதனை படமாக்கினாராம் கார்த்திகி. இவருக்கு இயற்கையின் மீது அதீத பிரியம் ஏற்பட காரணம் இவர்களது குடும்பத்தினர் தானாம். கார்த்திகியின் தாயாருக்கு விலங்குகள் என்றால் அலாதி பிரியமாம். அதேபோல் கார்த்திகியின் தந்தை ஒரு புகைப்படக் கலைஞர். இவர்களிடம் இருந்து தான் இயற்கை மீதும் விலங்குகள் மீதும் கார்த்திகிக்கு அதீத ஆர்வம் வந்ததாம்.
கார்த்திகி பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டியில் தான். இவர் ஊட்டியில் உள்ள செயிண்ட் ஹில்டாஸ் என்கிற பள்ளியில் தான் படித்திருக்கிறார். இதையடுத்து கோவையில் உள்ள ஜி.ஆர்.டி என்கிற கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.sc விஸ்காம் படத்த கார்த்திகி பின்னர் போட்டோகிராபி படித்திருக்கிறார். இதையடுத்து புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கார்த்திகி குறும்படங்களையும் இயக்கி வந்துள்ளார். அந்த வகையில அவர் இயக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படம் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இதையும் படியுங்கள்... நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு... சரித்திரம் படைத்தது ஆர்.ஆர்.ஆர்