Thalapathy vijay : 2.30 மணிநேரத்துக்கு மேல் படம் எடுத்தால், அது நல்ல படமாகவே இருந்தாலும் தோல்வி அடைந்துவிடும் என நடிகர் விஜய், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் கோப்ரா. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் இயக்குனருமான அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி இருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, மீனாட்சி, பூவையார், ரோபோ சங்கர், இர்பான் பதான், ஆனந்த்ராஜ், மியா ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கோப்ரா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதற்கு காரணம் அப்படத்தின் நீளம் தான். பொதுவாக படங்கள் 2.30 மணிநேரத்திற்கு எடுக்கப்படும், ஆனால் இப்படம் 3 மணிநேரத்திற்கு மேல் எடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.

இதையும் படியுங்கள்... சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு தயாரிப்பாளர் ரவீந்தருடன் திடீர் என நடந்த இரண்டாவது திருமணம்! வைரலாகும் போட்டோஸ்!

இதனால் படம் பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு நீளமான படம் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டு, நேற்று மாலை முதல் திரையிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் இதை முன்பே செய்திருக்கலாமே என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், 2.30 மணிநேரத்துக்கு மேல் படம் எடுத்தால் நல்ல படமாகவே இருந்தாலும் தோல்வி அடைந்துவிடும் என நடிகர் விஜய், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது : ”இன்றைக்கு இருக்கும் புது இயக்குனர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவங்களோட எல்லா படமும் நான் பாக்குறேன். புது புது ஐடியாவோட நல்ல நல்ல படங்கள் பண்றாங்க.

Scroll to load tweet…

ஆனா, 2.30 மணிநேரத்துக்குள்ள உங்க கதைய சொல்லி முடிச்சிடுங்க. அதுக்குமேல போச்சுனா, படம் நல்லாவே இருந்தாலும் ஆடியன்ஸ் படத்தை பார்க்குறதுக்கு பதிலா அவங்க வாட்ச்ச பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. ரொம்ப நேரம் படம் எடுத்தா பாம்பு கூட கீரி கிட்ட தோத்துப்போகும்” என அவர் பேசியது தற்போது கோப்ரா படத்துக்கு அப்படியே பொருந்தும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அன்றே கணித்தார் விஜய் என குறிப்பிட்டு அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி அம்மு அமிராமி நடிக்கும் புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லரான “பெண்டுலம்”!