வைரமுத்துவுக்கு எதிராக “மீ டூ” ஹேஷ் டேகில் சின்மயி தெரிவித்திருந்த புகார் கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவிலான சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து பிரபலங்கள் வெளிப்படையாக டிவிட்டரில் புகார் அளித்துவரும் இந்த “மீ டூ” டேகில் சின்மயி வைரமுத்து மீது குற்றம் சாட்டிய விவகாரம் ,இரு தரப்பினர் மீதும் மிகப்பெரிய அளவிலான விவாதத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் பலரும் சின்மயிக்கு எதிரான கருத்துக்களை தான் பதிவிட்டிருந்தனர். இத்தனை நாள் கழித்து இந்த புகாரை இப்போது சொல்ல வேண்டிய காரணம் என்ன? வைரமுத்துவின் பெயரை கெடுப்பதற்காக தான் சின்மயி இவ்வாறு செய்கிறார் என பலரும் பலவிதமாக பேசிவந்தனர். 

இந்த சர்ச்சையின் விளைவாக சின்மயி-ன் கணவர் ராகுல் ரவீந்திரனையும் சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்திருக்கின்றனர் சிலர். தனக்கு அடுத்தடுது இணையத்தில் வந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பதிலளித்திருக்கும் ராகுல் பின் வருமாறு ஒரு பதிவினை வெளியிடிருக்கிறார். அதில் “ வேறு வேலையே இல்லாமல் என்னை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சிலருக்காக இந்த பதிவினை வெளியிடுகிறேன். என் மனைவியின் இந்த புகார் உங்களை அசெளகர்யத்துக்கு ஆளாக்கி இருக்கலாம். ஏனென்றால் அவள் தைரியம் மிகுந்த ஒரு அதிசயப்பிறவி. 

உங்களின் ஆணாதிக்கத்திற்கு அவள் ஒரு அச்சுறுத்தலாக கூட தோன்றலாம். ஆனால் உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. விரைவிலேயெ இங்கு சமநிலை உருவாகும். அதுவரை இது மாதிரி உரத்த குரல் எழும்ப தான் செய்யும். எனக்கு அவள் ஒரு அசெளகர்யமாக தோன்றவில்லை. இப்படி ஒரு பெண்ணை மணந்ததற்காக நான் பெருமை கொள்கிறேன். 

தன்னை விட அவள் என்னை தான் அதிகம் நேசிக்கிறாள்” என அந்த பதிவில் ராகுல் தெரிவித்திருக்கிறார். இது நாள் வரை இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காத ராகுல் இந்த பதிவினை வெளியிட்டு தன்னிடைய காதல் மனைவிக்கு இந்த “மீ டூ”விவகாரத்தில் தன் முழு ஆதரவும் இருக்கிறது என்பதனை இதனால் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் ராகுல்.