வடியாத வெள்ளம்.. 4 நாட்களாக ஓயாத களப்பணி - ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி வரும் சூர்யாவின் ரசிகர்கள்!
Chennai Floods Suriya Fans : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழை, பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மழை நின்று மூன்று நாட்கள் ஆன பிறகும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தான் மிக்ஜாம் புயல் கரையை கடந்தது என்றாலும் கூட, கடந்த டிசம்பர் 4ம் தேதியே சென்னையில் மழை குறைய தொடங்கியது. இதனை அடுத்து சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விட்டாலும் கூட, தாழ்வான பல பகுதிகளில் இன்றளவும் இடுப்பளவு நீரில் தான் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தன்னார்வலர்கள் பலர் களமிறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் 10 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரண நிதிக்காக கொடுத்தார். அவரைத் தொடர்ந்து பல நடிகர், நடிகைகள் தங்களால் இயன்ற பணத்தை தற்பொழுது வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து வருகின்றனர்.
தளபதி விஜய் அவர்களும், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவ தனது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை ஊக்குவித்துள்ளார். நடிகர்கள் தர்ஷன், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவிகளை செய்து வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் பாலா அவர்கள் சுமார் 100 குடும்பங்களுக்கு பணமும் பொருள் உதவியும் அளித்துள்ளது வெகுவாக பலர் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்த சூழலில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் பலர் கடந்த நான்கு நாட்களாக ஓய்வு உறக்கமின்றி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு நேரில் சென்று உணவுகளும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கி வருகின்றனர். தங்களை திரையில் கொண்டாடும் ரசிகர்களுக்கு, இது நடிகர்கள் செய்யும் ஒரு வகை கைமாறு என்றே கூறலாம்.