சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா, சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேம்நாத்துடன் நேற்று தங்கியிருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் ஹேம்நாத் தெரிவித்தார். இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டாலும், போலீசார் பல்வேறு கோணங்களில் சித்ரா தற்கொலை வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரேதபரிசோதனையின் முதல் கட்ட விசாரணையில், சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டதாகவும், அவரது முகத்தில் உள்ளது சித்ராவின் நகக்கீறல் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் போலீசார் சித்ரா தங்கி இருந்த, நட்சத்திர ஓட்டல் அறையின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்தபோது, அது சரிவர இயக்கவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த ஹோட்டல் மேனஜர் கணேசனிடம் விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

மேலும் ஹோட்டலில் பணிபுரியும் மூன்று பேரை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகிறார்கள். நெடுஞ்சாலைகளில் கூட குற்ற சம்பவங்கள் அரங்கேற கூடாது என்பதால் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா வைத்துள்ள நிலையில், பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்து தங்கும் நட்சத்திர விடுதியில் கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் ஏதேனும் உண்மை மறைக்கப்படுகிறதா என்கிற சந்தேகத்தையும் வரவைத்துள்ளது.