ஒரே ஒரு கண் சிமிட்டலில் உலகப்புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர் நடித்துள்ள ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்துக்கு தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர் தற்போது தமிழில் ‘பிங்க்’ ரீமேக் உட்பட அஜீத்தை வைத்து தமிழில் இரு படங்களைத் தயாரிக்கவிருப்பது தெரிந்த சங்கதி.

கடந்த ஆண்டு குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தபோது குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார் நடிகை ஸ்ரீதேவி. அப்போதே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியான பிரியா வாரியர் நடித்துள்ள ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் ட்ரெயிலரில் பிரியா வாரியர் மது அருந்துவது போலவும், குளியல் அறையில் துடித்து அழுவது போலவும் சிகரட் பிடிப்பது போலவும் காட்சிகள் வெளியாகின. அந்தக் காட்சிகள் ஸ்ரீதேவியின் நிஜ வாழ்வைப் பிரதிபலிப்பது போல் இருப்பதாகவும், படமே ஒருவேளை ஸ்ரீதேவியின் மர்ம மரணம் தொடர்பானதாக இருக்கக்கூடும் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

அச்செய்தி காட்டுத்தீயாய்ப் பரவியவுடன் ஸ்ரீதேவியின் கணவர் ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் மாம்பல்லி ‘நடிகை ஸ்ரீதேவி தொடர்பான படம் இதுவல்ல. தேவைப்பட்டால் போனிகபூருக்கு படத்தைக் காட்டி விளக்குவோம்’ என்கிறார்.