பாகிஸ்தான் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக தாயகம் திரும்பிய இந்திய நாயகன் அபிநந்தனின் கதையைத் திரைப்படமாக, வெப்சீரியலாக உருவாக்க ஏராளமான கோலிவுட், பாலிவுட் டைரக்டர்கள் முயன்று வருவதாக செய்திகள் வருகின்றன.

புல்வாமா குண்டுவெடிப்பு நிகழ்வுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று 60 மணி நேரத்திற்குப் பின்னர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த மூன்று தினங்களாகவே ஊடகத்தின் தலைப்புச் செய்திகளில் அபிநந்தன் தொடர்பான செய்திகளே இடம்பெற்றிருந்தன. பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பது குறித்த கற்பனைச் செய்திகளும் நிறைய வலம் வந்தன.

இந்நிலையில் பலரும் யூகிக்கக்கூடிய ஒரு செய்தியாக, கோடம்பாக்கத்திலும். பாலிவுட்டிலும் அபிநந்தன் குறித்து சுடச்சுட படம் எடுத்து தேசபக்தி  வியாபாரம் செய்யத்துடிப்பதாகத் தெரிகிறது. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்க கில்டிலும் அபிநந்தன் பெயரில் பட டைட்டில்கள் பதிவு செய்ய பலரும் துடித்துவருவதாகத் தெரிகிறது.

ஆனால் கோலிவுட்டை மிஞ்சும் வகையில்  மும்பை அந்தேரியிலுள்ள இந்திய மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் குறைந்தது ஐந்து தயாரிப்பு நிறுவனங்களாவது புதிய பெயர்களை பதிவு செய்துள்ளன.’ புல்வாமா’, ’அபிநந்தன்’ என படங்களுக்காக பல்வேறு தலைப்புகளைத் தயாரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில், புல்வாமா: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், வார் ரூம், ஹிந்துஸ்தான் ஹமாரா ஹை, புல்வாமா டெரர் அட்டாக், தி அட்டாக்ஸ் ஆஃப் புல்வாமா, வித் லவ் ஃப்ரம் இந்தியா, ஏடிஎஸ்-தி ஒன் மேன் ஷோ, புல்வாமா த டெட்லி அட்டாக் ஆகிய தலைப்புகளைத் தயாரிப்பாளர்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் மிகவும் பிரபலமாகிவரும் வெப் சீரியல்களாக அபிநந்தன் கதையை உடனே துவங்க சிலர் பிரபல சானல்களை அணுகியிருப்பதாகத் தெரிகிறது. இந்த அவசர தேசபக்தியை நெட்டிசன்கள் பலரும் கிழித்துத் தொங்கப்போட்டுக்கொண்டுவருகின்றனர்.