Anti Indian : மலிவான விளம்பரம், சுய அரசியல் லாபத்திற்காக ரகளை செய்து, எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ப்ளூ சட்டை மாறன் போலீஸ் கமிஷ்னரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களை பாரபட்சம் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கிய ஆன்டி இண்டியன் (Anti Indian) திரைப்படம் டிசம்பர் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் பார்வதி தியேட்டரில் நேற்று இரவுக்காட்சி நடந்த சமயத்தில் நுழைந்த பாஜக கட்சியை சேர்ந்த சுமார் பத்து பேர் 'இப்படம் இந்துக்களை இழிவுபடுத்துவதாலும், எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராக உள்ளதாலும் இப்படத்தை திரையிடக்கூடாது' என்று கோஷமிட்டனர்.

ஆகவே அக்காட்சி நிறுத்தப்பட்டு, படம் பார்க்க வந்த ரசிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் அங்கிருந்த ஆன்டி இண்டியன் பேனரை கீழே இறக்க வேண்டுமென மிரட்டல் விடுக்கவே.. அந்த பேனர் இறக்கி வைக்கப்பட்டது. மேலும் இப்படத்தை மறுநாளும் திரையிடக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆகவே அடுத்த காட்சிகள் அங்கு திரையிடப்படவில்லை.

இந்நிலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:'மூன் பிக்சர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஆதம்பாவா என்பவரின் தயாரிப்பில், ஆன்டி இண்டியன் என்ற படத்தை இயக்கி உள்ளேன். படம் வெளியாகி 240 தியேட்டர்களில் ஓடுகிறது. 

முறையாக தணிக்கை செய்து, படத்தை வெளியிட்டுள்ளோம். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில், ஆன்டி இண்டியன் படத்தை திரையிடக் கூடாது' என, 10க்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்துள்ளனர். 

தங்களை தேசிய கட்சி பிரதிநிதிகள் என்றும் கூறியுள்ளனர்.மலிவான விளம்பரம், சுய அரசியல் லாபத்திற்காக ரகளை செய்து, எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.