இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான 'பிகில்' படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் ஆனது. 'எந்திரன்', '2.0' படங்களுக்குப் பிறகு சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால், எதிர்பார்த்த மாதிரியே பாக்ஸ் ஆஃபிசை அதிர வைத்து வரும் 'பிகில்', வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூலை வாரிக் குவிக்கிறது. 

ஒரே வாரத்தில் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒட்டுமொத்த திரையுலகையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது 'பிகில்' படம். ஏற்கெனவே, 'மெர்சல்', 'சர்க்கார்' ஆகிய படங்களும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது பிகில் படமும் அந்த படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. உலகளவில் பெரும் வசூல் செய்தாலும், தமிழகத்தில் மட்டும் கலெக்ஷன் ரூ.100 கோடியை எப்போது கடக்கும் என எதிர்பார்த்த நிலையில்,  'பிகில் படம்' இன்று வசூலில் ரூ.100 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம், பாக்ஸ் ஆஃபிசில் தான்தான் கிங் என்பதை 'தளபதி' விஜய் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த தகவலை, சினிமா விமர்சகரும், ட்ராக்கருமான கவுசிக், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

2019-ல் வெளியான தமிழ் படங்களில், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த 3-வது படம் 'பிகில்' என்ற பெருமையையும் பெற்றுள்ளது. பிகிலுக்கு முன்னதாக இந்த ஆண்டு வெளியான ரஜினியின் 'பேட்ட', அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்து ஏற்கெனவே இந்த சாதனையை படைத்துள்ளன. திரையரங்குகளில் பிகில் படத்திற்கான காட்சிகள் குறைக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும், இன்றைய சூழலில் ஒரு படம் ஒரு வாரம் கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடுவதே சாதனைதான். அப்படி பார்க்கையில், இன்றைய தினமும் வசூலில் பங்கம் இல்லாமல் கல்லா கட்டிவரும் பிகில் படம், இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப்படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.