கன்னட மொழி பிரச்சனையில் கமலுக்கு ஆதரவாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பற்றி எரியும் கன்னட மொழி சர்ச்சை
‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், “தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்” என கூறி இருந்தார். அவரின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி, பல கன்னட அமைப்புகள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கமலின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக கமலஹாசன் நீதிமன்ற உதவியை நாடினார்.
கமலை கடுமையாக விமர்சித்த கர்நாடக உயர்நீதிமன்றம்
வழக்கை விசாரித்த கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாக பிரசன்னா, “கமலஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? எந்த அடிப்படையில் கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என கூறினார்? இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ரூ.300 கோடி செலவில் படம் எடுத்ததாக சொல்கிறீர்கள். ஆனால் மன்னிப்பு கேட்க ஏன் மறுக்கிறீர்கள மன்னிப்பு கேட்க முடியவில்லை என்றால் கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை திரையிட முடியாது என காட்டமாக கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் கமலுக்கு பெருகும் ஆதரவு
ஒரு மாநில நீதிமன்றமே இவ்வாறு கூறியிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட கமல், “மொழி மீதான என்னுடைய அன்பு உண்மையானது. கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்திருக்கும் அன்பு மீது எனக்கு மரியாதை உண்டு. தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன். ஆனால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்பது? என கேள்வி எழுப்பி இருந்தார். கமல் மன்னிப்பு கேட்காத காரணத்தால் இந்த வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் கமலுக்கு தமிழ்நாட்டில் ஆதரவு பெருகி வருகிறது.
பிக் பாஸ் முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் இந்த பிரச்சனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “மன்னிப்பவன் மனிதன். மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன் என கமல் கூறி இருப்பார். அந்த வசனத்தின் இறுதியில், “அவன் தவறை உணர்ந்ததால் மன்னிப்பு கேட்கிறான்” எனச் சொல்லி இருப்பார். இந்த விஷயத்தில் கமல் தவறே செய்யவில்லை. பிறகு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தன் மொழி தான் முக்கியம் என கமலஹாசன் நிற்கிறார். இந்த நேரத்தில் நாம் அனைவருமே அவர் பக்கம் நிற்க வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று இருக்கிறோம். தன்மானத்தை இழந்து இருக்கவில்லை” என ஆவேசத்துடன் பேசி இருக்கிறார்.
இணையத்தில் டிரெண்டாகும் I Stand With KamalHaasan ஹேஷ்டேக்
முத்துக்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கமலஹாசனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். ஐ ஸ்டாண்ட் வித் கமலஹாசன் (I Stand With KamalHaasan) என்கிற ஹேஷ்டேகும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
