தக் லைஃப் நாளை ரீலிஸ்.! கமலுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், தமிழக அரசு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. கர்நாடகாவில் படம் வெளியிடப்படவில்லை என்று கமல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடித்துள்ள "தக் லைஃப்" திரைப்படம்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள "தக் லைஃப்" திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இயக்குனர் மனிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் இடம்பிடித்துள்ள இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. எனவே "தக் லைஃப்" திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பல திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டது.
கர்நாடகாவில் "தக் லைஃப்" ஒத்திவைப்பு
இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படம் வெளியிடப்படவில்லையென கமல்ஹாசன் அறிவித்துள்ளார். கன்னட மொழி தொடர்பாக கமல்ஹாசன் பேசியதை அங்குள்ள அரசு மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை வெளியிடப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் தவறாக பேசாத ஒன்றுக்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என கமல் தரப்பு கூறி கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படம் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது
சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்ட ராஜ்கமல் நிறுவனம்
இந்த நிலையில் நாளை வெளியாகவுள்ள "தக் லைஃப்" திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சென்னை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, V. நாராயணன் அவர்கள், "தக் லைஃப்" என்ற திரைப்படத்திற்கு 05.06.2025 அன்று வெளியாகும் நாள் மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி அளிக்கும்படி அரசைக் கோரியுள்ளார். திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும்,
திரையரங்கில் பாதுகாப்பு ஏற்பாடு
திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன். உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் Raaj Kamal Films International ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
5 காட்சிகள் திரையிட அனுமதி
அந்த வகையில் ஒரு நாள் மட்டும் "தக் லைஃப்" திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை (மொத்தம் 5 காட்சிகள்) திரையிட அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.