பட்டம் வைத்துக் கொள்ள பயமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

ஒரு நடிகை படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுப்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள் என்றால் அது நயன்தாராவுக்கு மட்டும் தான்.

கிட்டத்தட்ட ஆறு படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இந்த மாதம் “அறம்” மற்றும் “வேலைக்காரன்” என்று அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.

அறம் படத்தில் துணிச்சல் மிகுந்த நேர்மையான மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்பது எதிர்ப்பார்ப்பு.

தற்போது இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த நயன்தாராவிடம் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு நயன்தாரா, “அந்தப் பட்டம் வைத்துக் கொள்ள எனக்கு பயமாக இருக்கிறது. அறம் படத்தின் கதையைப் போன்று நேர்மையாகவும், பொறுமையாகவும் இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.