தெலுங்கில் பிரபல நடிகராக உள்ள பிரபாஸின் திருமண நாள் எப்போது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு திரையுலகில் சாக்லேட் பாயாக இருப்பவர் பிரபாஸ். எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகங்கள் வாயிலாக தமிழக ரசிகர்கள் மத்தியிலும் இவர் பிரபலமானார். திரையுலகில் பிரபாஸ் கால் பதித்தது முதல் இவரை பற்றி வெளியாகி வரும் கிசுகிசுப்பு  ஒன்றே ஒன்று தான். அது இவரது திருமணம் குறித்த கிசுகிசுப்பாக தான் இருக்கும். 

பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்த அனுஷ்காவும் பிரபாஸும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் அவ்வப்போது கிசுகிசுப்பு எழுந்தது. ஆனால் இதற்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர். தாங்கள் நட்புடன் மட்டுமே பழகி வருவதாக இருவரும் விளக்கம் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து சாஹூ படப்பிடிப்பில் பிரபாஸ் பிசியாகிவிட்டார். 

தற்போது பிரபாஸிற்கு 38 வயது ஆகிவிட்டதால் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் அவர் தனது திருமணம் தொடர்பான அறிவிப்பை அடுத்த மாதம் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளார் என்பதே அந்த தகவல். 

அக்டோபர் 23ஆம் தேதி பிரபாஸ் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளதால் அன்றைய தினம் நல்ல செய்தி வரும் என்று கூறப்படுகிறது. இந்த வருடமாவது பிரபாஸுக்கு திருமணம் நடந்து விடாதா என்று ஏங்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது.