நடிகை நயன்தாரா,விஜய் ஆகியோர்களின் அப்பாயின்மெண்ட் வாங்கி இன்னும் கொஞ்சம் உயரத்துக்குப் போய் கதைகள் விட நினைத்தோ என்னவோ 'பிகில்’படம் துப்பாக்கி, கத்தி படங்கள் போல் மாபெரும் வெற்றி அடையும் என்று அவர்களது ஜாதகத்தை வைத்து ரீல் சுற்றியிருக்கிறார் பிரபல ஜோதிடர் பீலா’ஜி ஹாசன்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பாக ஒரு சில கணிப்புகளை சரியாக வெளியிட்டதால் வெளிச்சத்துக்கு வந்த பாலாஜி ஹாசனின் சமீபத்திய இம்சைகள் எல்லை மீறிப்போய்க்கொண்டிருக்கின்றன. அதன் உச்சமாக இந்த தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் விஜய் படம் குறித்து விஜய்,அட்லி,நயன் ஆகிய மூவரின் ஜாதகங்களை வைத்து கணித்திருக்கிறார். விஜய் படம் ஹிட்டோ இல்லையோ அது ஹிட்டாகவே காண்பிக்கப்படும் என்ற சாதாரண உண்மை பாலாஜி அறியாததல்ல. நயன் ஜாதகமெல்லாம் எங்கிருந்து இவருக்குஇ கிடக்கிறது என்று பார்த்தால் அதை விக்கி பீடியாவில் [விக்னேஷ் பீடியாவில் அல்ல] இருந்து எடுக்கிறாராம்.

இது குறித்து  தனது யூடியுப் பதிவில் பேசியுள்ள  பாலாஜி ஹாசன்,... தற்போது இப்போது மாறுகின்ற குரு விஜய்யின் ராசிக்கு, யோகாதிபதி ஸ்தானம் என கூறக்கூடிய லாபாதிபதி ஸ்தானத்தை தான் பார்க்கிறார். எனவே கண்டிப்பாக அவருக்கு வெற்றி.அதேபோல் அட்லியின் விக்கிபீடியாவில் கிடைத்த பிறந்த தேதியை வைத்து பார்த்தால்... அவருக்கும் யோக ஸ்தானத்திலும்,  ஏழாவது இடத்திலும் சம சப்தம பார்வை பார்க்கிறார்.  ஏழாம் இடம் குருவுக்கு பலம் அதிகம் எனவே அவருடைய வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவித்துள்ளார்.

 நடிகை நயன்தாராவை பொறுத்தவரை அவருடைய ராசிக்கு, பட சுக்கிரன் இடத்தையும்,  வெற்றியை கொடுக்கக்கூடிய ஆறாம் இடத்தை சனியும் குருவும் ஒரு சேர பார்ப்பது கூடுதல் சிறப்பு.  எனவே இந்தப்படம் ’துப்பாக்கி’,’கத்தி’ போன்ற படங்களுக்கு இணையாக மிகப்பெரிய வெற்றியை தரும் என கூறி இருக்கிறார். அய்யா பாலாஜி நீங்க ஜோதிடத்தில் உண்மையான புலி என்றால் அதே ஜாதகத்தை வைத்துக்கொண்டு நயன்தாராவுக்கு யாருடன், எப்போது திருமணம் நடக்கும் என்று கணித்துக் கூறுங்க பார்க்கலாம்.