புது மாப்பிள்ளை ஆன ராசியால் நடிகர் ஆர்யாவுக்கு கமலின் ‘இந்தியன் 2’ வில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. படத்தில் கமலின் இளைஞர் அணித் தலைவராக முக்கிய பாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாக நம்பகமான தகவல்கள் வருகின்றன.

கமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ‘இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஒரு வேடமா, 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது. ஆனால் கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதிபதி வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.

முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே வந்து இளைஞர்கள் படையை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.   அடுத்து கமலின் தளபதி போல்வரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிகர் ஆர்யா கமிட் ஆக உள்ளார்.

படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்பதை முறையாக அறிவிப்போம். வில்லனாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இரண்டாம் ஷெட்யூலுக்காக தேதிகளை கமல் அறிவித்தவுடன் படத்தில் இன்னும் பல முக்கியமான நட்சத்திரங்கள் வந்து இணைவார்கள்’ என்கிறது ‘இந்தியன் 2’ பட வட்டாரம்.