தமிழ்சினிமாவின் நீண்டகால எலிஜிபிள் பேச்சுலர்களில் திருமணத்தை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த ஆர்யாவும் ஒரு வழியாக விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவரது நீண்ட கிசுகிசு பட்டியலில் கடைசியாக இடம்பிடித்த சாயிஷாதான் மணப்பெண்.

தற்போது 38வது வயதில் நடமாடி வரும் ஆர்யா, தான் முதன்முதலில் அறிமுகமான ‘அறிந்தும் அறியாமலும்’ பட காலத்திலிருந்தே அதிக நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். ஜீவா,விஷ்ணு ,விக்ராந்த் ஆகிய இவர்களது நண்பர்கள் பட்டாளத்தில் விஷாலும் தனது திருமண சேதியை அறிவித்துவிட்ட நிலையில் ஆர்யா மட்டுமே பிரம்மச்சாரியாக மிஞ்சி இருந்தார்.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயி‌ஷா தமிழில் ’வனமகன்’, ’கடைக்குட்டி  சிங்கம்’,’ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்றும் செய்திகள் பரவின. அதை இருவருமே மறுக்கவில்லை.

இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா-சாயிஷா திருமணம் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவிருப்பதாவும், மார்ச் 9 அன்று சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நடக்கவிருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.