இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான, 'மூப்பில்லாத் தமிழே.. தாயே' எனும் பாடல், உலகின் உயரமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் ஒலிக்கும் போது 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்று நம் ஆருயிர்த் தலைவரின் அந்த வரிகளை கேட்ட போது மெய் சிலிர்த்து, ஆனந்த கண்ணீர் கசிந்தது என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான, 'மூப்பில்லாத் தமிழே.. தாயே' எனும் பாடல், உலகின் உயரமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் ஒலிக்கும் போது 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்று நம் ஆருயிர்த் தலைவரின் அந்த வரிகளை கேட்ட போது மெய் சிலிர்த்து, ஆனந்த கண்ணீர் கசிந்தது என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
துபாய் பயண அனுபவம் மற்றும் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் கடல் கடந்து எழுதும் மடல் என்று ஆரம்பிக்கிறது அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை..
அதில், உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் ஒரு எக்ஸ்போவை நடத்துவதற்காக, பாலைவனம் போன்ற இடத்தை மிக நேர்த்தியாக மாற்றி அமைத்திருந்த துபாய் அரசு, துபாய் மக்களின் நிர்வாகத்திறனும் உழைப்பும் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அந்த வியப்புடனயே பயணித்த நிலையில், அங்கே ஓர் இனிய அதிர்ச்சி. தமிழ்நாட்டின் புகழை ஆஸ்கர் விருது வாயிலாக உலகமறியச் செய்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நான் வருவதை அறிந்து, தன் மகனுடன் அங்கே எனக்காகக் காத்திருந்தார். தன்னுடைய இசைப் பதிவு ஸ்டுடியோவுக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். நிச்சயம் வருவதாக உறுதியிளித்தேன்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய ஸ்டுடியோவுக்குச் சென்றேன். 'மூப்பில்லாத் தமிழே.. தாயே' என அவர் உருவாக்கியிருந்த ஆல்பத்தை எனக்குத் திரையிட்டுக் காட்டினார். முத்தமிழிறிஞரின் செம்மொழிப் பாடலுக்கு இசை சேர்த்த விரல்கள் ஆயிற்றே.. தமிழுக்கு மற்றொரு அணிகலனாக அவருடைய ஆல்பம் அமைந்திருந்தது. 'தமிழுக்கும் இசைக்கும் எல்லையே இல்லை' என ரஹ்மான் அவர்களின் இசைச் சேவையைப் பாராட்டி ட்வீட் செய்தேன்.
உலகின் உயரமான புர்ஜ் கலீஃபா கோபுரம் அமைந்துள்ளது. தமிழின் பெருமை அங்கு காட்சிப்படுத்தப்படுவதைப் பார்ப்பதற்காக அமீரகத் தமிழ் மக்கள் பலரும் திரளாக வந்திருந்தனர். பிறநாட்டு மக்களும் இருந்தனர். தாய்த் தமிழின் பெருமையை உயரத்திலிருந்து உலகத்திற்கு எடுத்துரைக்கும் அந்தக் காணொலிக்கான இசையாக 'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற நம் ஆருயிர்த் தலைவரின் வரிகள் ஒலித்தபோது மெய் சிலிர்த்தது. கண் கசிந்தது.
ஆயிரக்கணக்கான கைகள் ஒருசேரத் தட்டி ஒலி எழுப்பின. உள்ளத்தில் மகிழ்ச்சிப் பேரலை அடித்தது. தமிழின் புகழ் ஏற்றி வைக்கப்பட்ட அந்த உலகின் உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்று துபாயின் பேரெழிலைக் கண்டேன்.. கண்டேன்.. கண் இமைக்காமல் கண்டுகொண்டே இருந்தேன். பாலைவனமாக இருந்த ஒரு நாடு எத்தனை வளத்துடனும், அழகுடனும், விண்மீன்கள் தரையிறங்கியது போன்ற இரவு விளக்குகளுடனும் ஒளிர்கிறது என வியந்தேன். இலக்கை நிர்ணயித்து, உறுதியுடன் பயணித்தால், நினைத்ததை நிச்சயம் அடைய முடியும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது என்று தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
