ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரம்! ACTC நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார்!
ஏ ஆர் ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குளறுபடிகள் தொடர்பாக, ஏசிடிசி நிறுவனம் மீது கானத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் மீது, தற்போது கானத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்ட நிகழ்ச்சி 'மறக்குமா நெஞ்சம்'. அப்போது மழை காரணமாக இந்த நிகழ்ச்சி தடைபட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மழை உட்பட எந்த காரணத்திற்காகவும் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கு ரெயின் கோட் வழங்க கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி சென்னை ஈசிஆரில் உள்ள, ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் நடந்த நிலையில், இசை நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடினர். இசை நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கு அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடினர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அலட்சியத்தால் இசை நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்கள், பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டனர்.
அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?
அதிக அளவு கூட்டம் கூடியதால் குழந்தைகளை கொண்டு வந்தவர்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். அதேபோல் பலர் கூட்ட நெரிசலை கண்டு நிகழ்ச்சியை காணாமலேயே வெளியேறினர். அதேபோல் இளம் பெண்கள் சிலர் மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறியது. இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டனர். இப்படி தொடர்ந்து கசப்பான அனுபவங்கள் மட்டுமே மறக்கமா நெஞ்சம் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கு கிடைத்தது. அதே போல் ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காண முடியாததால் சிலர் டிக்கெட்டுகளை கிழித்து போட்டு தங்களுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததற்கு ஏ ஆர் ரகுமானும் ஒரு விதத்தில் காரணம் என, சிலர் சாடிய நிலையில் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனம் இதற்கு முழு காரணமும் நாங்கள் மட்டுமே, ஏ ஆர் ரகுமானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தனர். மேலும் ஏ ஆர் ரகுமான் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியை காண முடியாத ரசிகர்கள் தனக்கு அவர்களின் டிக்கெட் காப்பியை மின்னஞ்சல் செய்து, அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறி இருந்தார்.அதன்படி சுமார் 4000 பேருக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்து இரண்டு வாரத்திற்கு மேல் ஆகியும், 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியின் குளறுபடிகள் குறித்த சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் மீது, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.